Thursday, October 12, 2017

அப்பா

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை:

நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ..
எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா..💚

அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினேயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்...
இல்லையேல்...கொடி கூட அவிழாத நிலையில் உன் கையில் ஏந்தி உச்சிநுகர்ந்து முத்தம் பதித்தாயே!! அப்பொழுது நிகழ்ந்து இருக்கக்கூடும்...

ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா??!!

கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும்
அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..??
உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்..

நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு
உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்..

சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா...

மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை யான் அறியாமல் யார் அறிவார்??

தாவணியின் நுனியினை பிசைந்தார் வண்ணம் உன் முன் நானி நான் நிற்க..
உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்!!
கண்களில் துளிர்த்த நீரை யவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டாய்..

பலவாறாக தம்மிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா..

நான் சமைத்த உணவை நா கூசாமல் புகழ்ந்து தள்ளுவாயே...!! உன் பொய்யிற்க்கும் ஒரு காதல் உண்டு அப்பா...

என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்...
பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்..
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா??

மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ..
என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ??

நான் விரும்பாததை நீ என்னிடம் புகுத்தியதும் இல்லை..
என் விருப்பத்தை நீ வெறுத்ததும் இல்லை...

என் ஒரே ஒரு கவலை என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கண்ணீர் விடும் உன்னை தேற்ற என்னை அன்றி எவருக்கு தெரியும் என்பதே??!!

என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்..
எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று...

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை..
ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா....

Tuesday, October 3, 2017

குட்டி உனக்காக..

என்னை பிரிவதும் 
மறப்பதும் 
உன்னால் முடியும் 
என்பது எனக்கு 
தெரிந்தது தான்... 
என்னால் இயலாது 
என்பது உனக்கும் 
தெரிந்தது தானே 
பிறகு 
எதற்க்காக 
கொடுத்தாய் 
இந்த பிரிவை...

Monday, September 18, 2017

வாழ்க்கை துணை

((((அது ஒரு சைக்காலஜி வகுப்பு))))
ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...

இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....

இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்...

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...

மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...

அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...தோழமைகளே...

*இது மனைவிக்கு மட்டும் இல்லை கணவர்களுக்கு தான்*

Sunday, September 17, 2017

பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே

*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே*

இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண்  ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை  நெருக்கிக்கொண்டிருந்தன.

அந்த  இளம் பெண்ணின் அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என  ஆதங்கப்பட்டார்.
அந்த பெண்  புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.

அந்த பெண்ணின்  இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!

*"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"*

இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின்,  வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும்  வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.

ஒருவர் உங்களைப் புண்படுத்திவிட்டாரா? அமைதியாக இருங்கள்,  *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

எவரேனும் உங்களுக்குத் துரோகம் புரிந்தாரா, உங்களை ஆக்கிரம வதை செய்தாரா(bully) ஏமாற்றினாரா, அவமானப்படுத்தினாரா? அமைதியாக இருங்கள்,  *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

ஒருவர் நமக்கு எப்பேற்பட்ட தொல்லைகளை ஏற்படுத்தினாலும், ஒன்றை நினைவிற்கொள்ளுங்கள், *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது  என்பதும் ஒருவருக்கும் தெரியாது. *பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே*

உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம்.  நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.

நான் எப்பொழுதாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எப்பொழுதாவது என்னைப் புண்படுத்தியிருந்தால், நானும் உங்களை மன்னித்துவிடுகிறேன். ஏனெனில், *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது ஒரு குறுகிய காலமே* அன்புடன,,,,்

Sunday, January 8, 2017

நீங்கள்தான் ராஜா

எதிர் தரப்பில் விளையாடுகிறவர்களின் எல்லா காய்களையும் வெட்டியும்கூட தோற்றுப் போகிறவர்கள் இருக்கிறார்கள். சில காய்களை மட்டுமே வெட்டி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள்.விளையாட்டு என்பது விளையாடி பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமல்ல. உடலால், மனதால், நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காகவும்தான்.
வெற்றிக்காக நாம் படிக்க வேண்டிய பாடங்கள் விளையாட்டிலும்கூட இருக்கிறது. செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இங்கே…
சதுரங்கம்
வெற்றியாளர்களே முதலில் துவங்குகிறார்கள்
சில நேரங்களில் யார் விளையாட்டை துவக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து விளையாட்டின் போக்கே மாறிவிடும். இது சதுரங்கத்தை போலவே உங்கள் வாழ்க்கைக்கும் பொருந்தும். எனவே வாழ்க்கையிலும் உற்சாகமாக முதலடி எடுத்துவைக்கிற நபராக எப்போதும் இருங்கள்.
சமமான எதிர்வினை உண்டு
செஸ் விளையாட்டில் நாம் நகர்த்தும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அதற்கு தகுந்த சமமான எதிர்வினை உண்டு. வாழ்க்கையிலும் அப்படித்தான்


ஏன், நாம் பேசும் வார்த்தைகளுக்குகூட அதேபோன்று சமமான எதிர்வினை உண்டு. விளையாடும்போது இருக்கும் இந்த நிதானம் பேசும்போது பலருக்கு இருப்பதில்லை. நாம் இதைச்சொன்னால் அவர்கள் என்ன நினைப்பார்கள் பதிலுக்கு என்ன பேசுவார்கள் என்பதை யோசிப்பதில்லை. இனி சதுரங்கக்காய் நகர்த்துவது போல வார்த்தைகளையும் கவனமாகப் பேசுங்கள்.
வீழ்த்துவதில் இல்லை பெருமை
மந்திரியை வெட்ட அவசரப்பட்டு, சுலபமாக தனது ராணியை இழந்துவிடுவார்கள் சிலர்.
வாழ்க்கையிலும்கூட சிலர் மற்றவர்களை பலவீனப்படுத்துகிற அவசரத்தில் தங்கள் பலங்களை இழந்துவிடுகிறார்கள். மற்றவர்களை கேவலமாகப் பேசி மற்றவர்களை இழிவு படுத்துகிறோம் என்று நினைத்து நம் கம்பீரத்தை இழந்து விடுகிறோம். இல்லையா ?
எதிர் தரப்பில் விளையாடுகிறவர்களின் எல்லா காய்களையும் வெட்டியும்கூட தோற்றுப் போகிறவர்கள் இருக்கிறார்கள். சில காய்களை மட்டுமே வெட்டி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள்.
அடுத்தவர் காயை வெட்டுகிற அவசரத்தில் தனக்கு உள்ள ஆபத்துக்களை பல சமயங்களில் கவனிப்பதில்லை. தான் வெற்றி பெறுவதைப் பற்றி யோசிக்காமல் மற்றவர்களை வீழ்த்துவதற்கு மட்டும் முயல்பவர்கள் தவறாது படிக்க வேண்டிய பாடம் இது.
உங்களை உங்களுக்கு ஆளத்தெரியுமா ?
சதுரங்கத்தில் ஒவ்வொரு காய்க்கென்றும் தனித்தனி பவர் உண்டு. அது தெரிந்தால்தான் ஆட்டத்தை சிறப்பாக ஆடமுடியும். உங்கள் சக்தி என்ன என்று உங்களுக்கு தெரியுமா? சதுரங்கத்தின் காய்களுக்கு இருப்பது போல உங்களுக்கும் பலவிதமான சக்திகள் உண்டு. அவற்றை நெறிப்படுத்துவதன் மூலமே உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ராஜாவுக்கு ஏன் பவர் இல்லை?
சதுரங்கத்தில் ராஜா வேஸ்ட் என்று நினைப்பவர்களும் உண்டு. காரணம் மற்ற எல்லா காய்களையும்விட ராஜாவிற்கு நகரும் திறன் மிக மிகக் குறைவு. அதனால்தான் இப்படி ஓர் எண்ணம்.
உண்மையில் ராஜாவிற்காகத்தான் ஆட்டமே. செயல்பட்டால்தான் என்றில்லை. செயல்பட வைப்பதுதான் பவர். எல்லா பவரையும் தன்னிடமே வைத்துக்கொண்டால் என்ன நடக்கும்? ராஜா சேவகனாகி விடுவார். உங்களின் வெற்றிப்பாதையில் அனைத்துச் செயல்களையும் நீங்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தேவைக்கேற்ப செயல்களை பகிர்ந்தளிப்பதால் வெற்றி விரைவிலேயே கிடைக்கும்.
நீங்கள்தான் ராஜா
எந்தக் காயை இழந்தாலும் ராஜாவை இழக்கும்வரை ஆட்டம் முடிவதில்லை. ராஜாவை இழந்தால்தான், விளையாடியவர் தோற்றவர் ஆவார். ஆகவே, இந்த விளையாட்டில், ராஜா உண்மையில் நீங்கள்தான்.
பெரும்பாலும் நம் வாழ்க்கை விளையாட்டிலும்கூட உங்களிடம் உள்ள அனைத்தையும் இழந்தால்கூட நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தோற்பவர் இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள்தான் ராஜா.
– அனுராஜன்

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்

புகழ்பெற்ற கல்லறை வாசகங்களாக யாரோ எழுதியதை இன்று படித்தேன்.. மிகவும் பொருத்தமாகவே இருந்தது..
புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை…
“சப்தமிட்டு நடக்காதீர்கள், இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் “,
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம், “உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் “.
மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள், ”இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு, இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது ” ..
ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம், “இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான் ” ….
அரசியல்வாதியின் கல்லறையில், ” தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது “.

ஒரு விலை மகளின் கல்லறை வாசகம், “இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால் “….
இவ்வளவு தானா வாழ்க்கை??? ஆம் அதிலென்ன சந்தேகம்?? ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல் …. உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள்..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.. நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும்?? நமது பதவியா ?? நாம் சேர்த்த சொத்து சுகங்களா ? நமது படிப்பா ?? நமது வீடா ?? நம் முன்னோர்களின் ஆஸ்தியா ?? நமது அறிவா ?? நமது பிள்ளைகளா ?? ஆணவத்தை பறைசாற்றும் நமது ஜாதியா ?????? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ???
ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை … பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள். இறந்த பின்னும் இறைவனோடு பேரின்ப வாழ்க்கை . கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்

இப்படி ஒரு ஆண் கிடைத்தால்

அவனை
நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை
மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு
வாய் தவறி வந்தது என்றுச்
சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும்
சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள்
குடும்பத்தாரை இழுத்துப் பேச
மாட்டார். ஒவ்வொரு சண்டையின்
பின்னும் உங்களை இன்னும் ஆழமாய்
நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர
மாட்டார். உங்கள் குறைகளை
நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால்,
எத்தனை அழகான பெண்கள் முன்னும்
நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய்
தெரிவீர்கள்.



6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில்,
அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய
முடியாது. வேறு எந்த வேலையிலும்
கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும்
ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு
பெண்ணைப் பற்றியும் உங்களிடம்
பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப்
பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள்
மௌனங்கள் அனைத்தையும் அழகாய்
மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும்
பிடித்த பெண்ணாய் உங்களை
மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார்
போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய்,
சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு,
குழந்தையாய், தோழியாய், தாரமாய்,
தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள்
அழுகை பார்த்து அதிகம் வருந்துவார்.
நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை
இழந்து நிற்பார்

நஞ்சை பொங்கல் 2024

 ஒரு மாதம் முன்பிருந்தே வீடுகளை வண்ணமயமாக்கி. முளைப்பாரி தயார் செய்து.. காப்பு கட்டுதல் தொடங்கி .. கலர் காகிதம் கட்டி .. இனிப்புகள் சுட்டு ....