வானமே எல்லை என்று இப்போது யாரும் சொல்வதில்லை . ஆகாயமே , உன் எல்லைகளை அகலப் படுத்து என்று கூறும் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . சுருங்கி விட்ட உலகில் விரிந்து விட்டது மனிதனின் சிந்தனை வீச்சும் செயல் வேகமும் .
ஒரு அலுவலகத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் பூரணத்துவம் எங்கள் நோக்கம் சிறப்பானவைகளை பொறுத்துக் கொள்வோம் செயல்பாடுகளும் அதன் விளைவுகளும் அசாதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் எப்படிப்பட்ட ஈர்ப்பும் , ஈடுபாடும் என்று பாருங்கள் . தரம் என்பது பொருட்களுக்கும் , சேவைகளுக்கும் மட்டும் தான் என்று அர்த்தமில்லை . ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அது பொருந்தும் .
மனிதனின் சிந்தனைகளும் செயல்களும் தரமிக்கவையாக இருக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது . விழிப்புணர்வும் , விடாமுயற்சியும் ஒருவனை தரமான மனிதனாக மாற்றும் . தரம் என்பது ஒரு நடவடிக்கையை மட்டும் குறிக்காது . அது கலாசாரத்தின் வெளிப்பாடு .
அசாதாரணமானவர்கள் தான் அசாதாரமான சாதனைகள் செய்ய முடியும் என்பதில்லை . சாதாரணமானவர்களும் , அசாதாரணமான நிகழ்வுகளை நிகழ்த்த முடியும் . நம்மால் முடியும் என்ற திடமான நம்பிக்கையும் திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் நினைத்துப் பார்க்க முடியாதவைகளை நடத்திக் காட்ட முடியும் (unthinkable becomes achievable). நாம் நேற்று எப்படி இருந்தோம் , இன்று எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததல்ல . நாளை எப்படியிருக்க முடியும் என்பது . கம்பளிப்பூச்சியில் அது வண்ணத்துப்பூச்சியாக மாறப் போவதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை . எதிர்கால வெற்றிகளால் கடந்தகால தோல்விகளை கதிகலங்கச் செய்ய முடியும் .
இன்றைய உலகம் நமக்கு சொல்லித் தரும் பாடம் என்னவென்றால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் , (expect the unexpected) மாற்றங்கள் மலிந்து விட்ட உலகம் . அதனால் ஏற்படும் வாய்ப்புகளும் சவால்களும் ஏராளம் . மாற்றங்களை சரிவர புரிந்து கொண்டு அவைகளை வரவேற்று ஏற்றுக் கொண்டு சவால்களை சாதனைகளாக மாற்றி காட்ட இன்றைய இளைஞர்கள் தயாராக வேண்டும் .
தொடர்ச்சியான சாதனைகளும் , முன்னேற்றங்களும் நம் வாழ்க்கைக்கு வாழ்வு (life to life) கொடுக்கும் . ஜப்பானியர்களின் வெற்றியின் ரகசியமே தொடர்ச்சியான மேம்பாடு தான் (continual improvement) வாழ்க்கையில் ஒன்றிரண்டு வெற்றிகளைப் பெற்று விட்டு நீண்ட காலம் ஓய்வெடுப்பது விவேகம் ஆகாது . நமது நேற்றைய சாதனை இன்றும் மிக பெரிதாக தெரியுமானால் இன்று நாம் ஒன்றும் செய்யவில்லை என்று தான் அர்த்தம் . (if our past achievement still look great, we have done nothing today). கடந்த கால சாதனைகளை நாம் இன்றும் கொண்டாடிக் கொண்டிருந்தால் திருப்திகரமான இயலாமை (satisfactory underperformance) நம்மிடம் குடிகொண்டு விடும் .
சந்தோஷம் என்பது சின்ன சின்ன விஷயங்களில் உள்ளது . வெற்றி என்பது பெரிய பெரிய சாதனைகளில் உள்ளது . மனித சக்தியையும் , நேரத்தையும் சரியான திசையில் முதலீடு செய்யும் போது சந்தோஷமும் , வெற்றியும் ஒருசேர வந்தடையும் இளைஞர்கள் வாழ்வில் வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன . அவைகளை அடையாளம் கண்டு ஆர்வத்தோடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
சாதனைகள் படைக்க முயலும் போது பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் . தடைகள் பல உருவாகலாம் . சுய ஊக்கத்தின் (self motivation) துணையோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும் . ஊக்கம் என்பது மனதுக்கு கொடுக்கும் சத்துணவு (Mental Nutrition). துறைமுகத்தில் நிற்கும் கப்பல் பாதுகாப்பாக தான் இருக்கும் . ஆனால் கப்பல்கள் அதற்காக கட்டப்பட்டவை அல்ல . வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நீச்சல் போட்டு தான் வெற்றிவாகை சூட முடியும் .
இன்று என்பது நாம் நேற்றுப் பார்த்து பயந்த நாளை தான் . இன்று நன்றாகத் தான் இருக்கிறோம் .
பயந்தபடி, வருத்தப்பட்டபடி விபரீதமாக எதுவும் நடக்கவில்லை என்ற நம்பிக்கை நம்மிடையே வளர்த்துக் கொள்ள வேண்டும் . அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழ்வை எதிர்நோக்கினால் சிக்கல்களும் சிறகாகும் . நாம் விரும்பும் வண்ணம் நம் வாழ்வை உருவாக்கலாம் என்பதை வண்ணத்துப்பூச்சி நமக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருக்கட்டும் .
No comments:
Post a Comment